ராமநகர்,
ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா சசிரேயனபாளையா பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் ஹேமந்த் (வயது 3). சந்திரசேகரின் வீடு அந்த கிராமத்தின் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரசேகர், தனது மனைவி, குழந்தையுடன் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார். மேலும் சந்திரசேகரின் தாய், தந்தை வீட்டின் வராண்டாவில் படுத்து தூங்கினர். இதனால் வீட்டு கதவுகள் அடைக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் அதிகாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று சந்திரசேகரின் வீட்டுக்குள் புகுந்தது. தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ஹேமந்த்தை சிறுத்தை வாயில் கவ்வி அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
புதரில் கிடந்த குழந்தை உடல்
ஆனால் குழந்தையை சிறுத்தை தூக்கிச் சென்றதை அறியாமல் சந்திரசேகர் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்து உள்ளனர். நேற்று காலை கண் விழித்த போது தான், குழந்தையை காணாமல் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தில் அவர்கள் தேடி பார்த்தனர்.
அப்போது வீட்டு அருகில் இருந்த ஒரு புதரில் ஹேமந்த் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான். மேலும் சிறுத்தை வந்து சென்ற கால் தடமும் அங்கு காணப்பட்டன. குழந்தையின் உடலை பார்த்து சந்திரசேகர், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
சிறுத்தை கடித்துக்கொன்றது
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாகடி புறநகர் போலீசாரும், வனத்துறையினரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தையின் கால் தடம் என்பது உறுதியானது. இதனால் குழந்தையை சிறுத்தை கொன்றதை வனத்துறையினர் உறுதி செய்தனர். அதைதொடர்ந்து குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மாகடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து மாகடி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோரிக்கை
இதற்கிடையே சசிரேயனபாளையா கிராம மக்கள், குழந்தையை கடித்துக் கொன்ற சிறுத்தையை இரும்பு கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும், உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வீட்டுக்குள் புகுந்து குழந்தையை தூக்கிச் சென்று சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பீதியையும், பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் வனத்துறை மந்திரி ஆனந்த் சிங் மற்றும் பெங்களூரு புறநகர் தொகுதி எம்.பி. டி.கே.சுரேஷ் ஆகியோர், குழந்தையின் வீட்டுக்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். பின்னர், குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மந்திரி ஆனந்த்சிங் அறிவித்துள்ளார்.