நவாலி சென். பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் அஞ்சலி செலுத்துவதற்கு பொலிசார் தடைகளை ஏற்படுத்திய போதிலும் அதனையும் மீறி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி விமான படையினர் வீசிய குண்டு வீச்சில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 147க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக தேவாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்துவதற்கு இன்று பொலிசார் தடை ஏற்படுத்தி இருந்தனர்.

பின்னர் அருட்தந்தையர்கள் மட்டும் சுடரேற்றி அஞ்சலி செலுத்த பொலிசார் அனுமதித்தனர். அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த பொலிசார் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் இன்றைய அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொலிசாரின் தடைகளை மீறி சுடரேற்ற முற்பட்ட போது பொலிஸ் அதிகாரியொருவர் அவரை இழுத்து விழுத்த முற்பட்டார். இருந்த போதிலும் அதனையும் மீறி சிவாஜிலிங்கம் நினைவு தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனும் சுடரேற்றினார். அதனை தொடர்ந்து பொலிசாரின் தடைகளை மீறி பொதுமக்கள் நினைவு தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

அதன் போது பொலிசார் கொரோனோ தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நீங்கள் ஒன்று கூடியதற்காக உங்கள் அனைவரையும் கைது செய்து தனிமைப்படுத்தும் அதிகாரம் எமக்கு உண்டு என பொலிசார் அச்சுறுத்தினர்.

அதனை தொடர்ந்து அருட் தந்தையர்கள் மக்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி விட்டு , சென்று விடுவார்கள். அவர்களை அஞ்சலி செலுத்த அனுமதிக்குமாறு பொலிசாரை கேட்டதற்கு இணங்க சமூக இடைவெளிகளை பேணி அஞ்சலி செலுத்துமாறு அறிவுறுத்தி அஞ்சலி செலுத்த அனுமதித்தனர்.

அதேவேளை பொலிசாரின் தடைகளை மீறி மக்களை சுடரேற்றி அஞ்சலி செலுத்திக் கொண்டு இருந்த வேளை அவ்விடத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து அவ்விடத்திற்கு துப்பாக்கிகளுடன் பத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் விரைந்து பொதுமக்கள் மத்தியில் அவர்களை அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டனர்.

இன்றைய நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மானிப்பாய் பொலிசார் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தடையுத்தரவு கோரிக்கையை முன் வைத்த போதிலும் நீதிமன்றம் அதற்கு தடை விதிக்க மறுத்தி-ருந்தமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *