சென்னை
தமிழகத்தில் 43 நாட்கள் ஊரடங்குக்குப் பின், கடந்த 7 ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட், மதுக்கடைகளை திறக்க அரசு நிபந்தனைகளுடன் சேர்த்து, மேலும் சில நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டிருந்தது.
பின், இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில்  தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, இன்னும் விசாரணைக்கு வரவில்லை.
இந்நிலையில், டாஸ்மாக் தொடர்பான அனைத்து வழக்குகளும், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் பி.என்.பிரகாஷ் ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது
இந்த வழக்குகள் தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் கிர்லோஸ்குமார் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மதுபான விற்பனைக்கு தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட், ஆன் லைன் முறையில் மது விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.
பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்த விதிமுறைகளின்படி, தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில், சமூக விலகலை பின்பற்ற வேண்டும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த உத்தரவு குறித்து அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மொத்த விற்பனை கூடாது எனவும், ஒருவருக்கு 2 பாட்டில்களுக்கு மேல் விற்பனை செய்யக் கூடாது எனவும், மூன்று நாட்களுக்கு ஒரு முறையே ஒருவருக்கு மது விற்பனை செய்ய வேண்டும் எனவும் மது வாங்குபவரின் பெயர், முகவரி மற்றும் ஆதார் எண்களை பதிவு செய்ய வேண்டும் என ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது
மதுபானம் விற்பனை செய்வதற்கு ஆதார் விவரங்களைக் கேட்பது என்பது தனிநபர் உரிமையை மீறிய செயல் எனவும், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரே இரவில் அதனை மேற்கொள்ள முடியாது.டெபிட் கார்டு, யுபிஐ போன்ற ஆப்களின் மூலம் மின்னணு பரிவர்த்தனைக்காக வங்கிகளுடன் டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை நடத்தியுள்ளது.
தற்போது தமிழகத்தில் மொத்தமுள்ள 5338 டாஸ்மாக் கடைகளில் 850 கடைகளில் மட்டும் தான் டெபிட்/கிரெடிட் கார்டு மூலமாக பணம் பெறும் வசதி (POS) உள்ளது. இந்த கருவிகளை கொள்முதல் செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இந்த பணிகள் நிறைவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *