சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஒரு கிராமத்தில் இருந்தது ஒரு மாரியம்மன் ஆலயம். அந்த அம்மனுக்கு தினசரி மூன்று வேளை பூஜைகள் செய்து ஆராதனை செய்து வந்தார், ஒரு அர்ச்சகர்.
அவருக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை. அழகான அந்தக் குழந்தை அடிக்கடி அர்ச்சகருடன் ஆலயம் செல்வதுண்டு. ஒரு நாள் மாலை ஆலயம் சென்ற அந்தக் குழந்தை பிரகாரத்தில் இருந்த குதிரை சிலை அருகே படுத்து உறங்கிவிட்டது. இதைக் கவனிக்காத அர்ச்சகர் அர்த்த ஜாம பூஜை முடிந்தவுடன் ஆலயத்தை பூட்டிவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டார்.
வீட்டிற்கு வந்ததும் மகளைத் தேடினார். குழந்தை எங்கே என்று மனைவியிடம் கேட்டார்.
“அவள் உங்களுடன் கோவிலுக்கு வந்தாளே! திரும்பி வரவில்லையே” என்று மனைவி கூற பதற்றமடைந்தார் அர்ச்சகர்.
குதிரை சிலை அருகே சிறுமி படுத்தது அப்போதுதான் அவருக்கு நினைவுக்கு வந்தது.
உடனே ஆலய சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். கோவிலின் பூட்டைத் திறக்க முயன்றார். முடியவில்லை.
“ஏன் கோவிலை திறக்கிறாய்?” எனக் கேட்டு அசரிரீ குரல் ஒலித்தது.
“என் குழந்தை உள்ளே இருக்கிறது” என்றார் அர்ச்சகர்.
“அர்த்தஜாம பூஜை முடிந்தபின் கோவிலை திறக்கக் கூடாது என்று அர்ச்சகரான உனக்குத் தெரியாதா?” எனக் கேட்டது அசரிரீ.
“தெரியும். ஆனால் என் குழந்தை உள்ளே இருக்கிறாளே”
“இருக்கட்டுமே! அவள் இங்கு பத்திரமாக இருப்பாள். காலையில் வந்து கூட்டிச் செல்”
ஒலித்த அசரிரீயின் குரல் அன்னையின் குரல்தான் என்று உணர்ந்தார் அர்ச்சகர். இருப்பினும் அவரால் தர்க்கம் செய்யாமல் இருக்க முடியவில்லை.
“இல்லை தாயே.. எனக்கு என் குழந்தை இப்போதே வேண்டும். குழந்தை இல்லாமல் நான் வீட்டிற்குச் செல்ல மாட்டேன்”
“உன் குழந்தை பத்திரமாக இருக்கிறாள். இன்று இரவு அவள் என்னோடு தங்கி இருக்கட்டும் நீ போய் வா”
“முடியாது. நான் குழந்தையோடுதான் வீட்டிற்குப் போவேன்.” என்றார் அர்ச்சகர் உறுதியாக.
“உனக்கு நான் முக்கியமா? குழந்தை முக்கியமா?”
“குழந்தைதான்”
சடேரென்று அர்ச்சகர் இப்படி சொல்லவே அன்னை கோபத்தின் உச்சிக்கே சென்றாள்.
“சரி இந்தா உன் குழந்தை” என்று ஒலித்த குரலைத் தொடர்ந்து குழந்தை பொத்தென்று சடலமாய் வந்து விழுந்தாள்.
இதைப் பார்த்த அர்ச்சகர் வேதனையோடு கத்தினார்.
“தாயே.. நீயே எனக்கு எல்லாம் என்று இருந்தேன். இப்படி என் குழந்தையை அனியாயமாகக் கொன்று விட்டாயே. இனி உனக்கு என் கையால் பூஜை செய்ய மாட்டேன்” என்று உரத்த குரலில் கோபத்துடன் கூவினார் அர்ச்சகர்.
மறுநாள் அதே கோபத்துடன் ஆலயம் வந்தார்.
மாரியம்மன், சந்தன கருப்பு, மதுரை வீரன் உள்ளிட்ட அனைத்து சுவாமி சிலைகளை எடுத்து ஒரு மரப்பெட்டியில் அடைத்தார்.
அருகே காவிரியில் வெள்ளம் நொங்கும் நுரையுமாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பெட்டியைத் தூக்கி அந்த வெள்ளத்தில் எறிந்தார். வீடு திரும்பினார்.
ஆற்றில் மிதந்து வந்தது அந்தப் பெட்டி. பல கல் தொலைவு பயணம் செய்து உய்யங்கொண்டான் ஆற்றில் பயணத்தைத் தொடர்ந்து திருச்சியில் கரை ஒதுங்கியது.
திருச்சி தென்னூர் கிராமத்தினர் அந்தப் பெட்டியை எடுத்துப் பிரித்தனர். உள்ளே குழந்தை வடிவில் அம்மன் சிலையும் பிற சிலைகளும் இருக்கக் கண்டனர். அவற்றை ஓரிடத்தில் வைத்து வணங்கத் தொடங்கினர்.
நாட்டில் பஞ்சம் தலை விரித்தாடத் தொடங்கிய நேரம். ஊரெங்கும் மக்கள் உண்ண உணவின்றி பசியாலும் பட்டினியாலும் வாடிக் கொண்டிருந்தனர். இதனால் அம்மனுக்கு முறையாக பூஜை செய்ய இயலவில்லை.
ஒரு நாள் அம்மன் சிலை அருகே அசரிரீ ஒலித்தது.
“உங்களுக்கு சிரமம் வேண்டாம். நான் பூமிக்கடியில் இறங்கி விடுகிறேன். இனி நீங்கள் என்னை ஜோதி வடிவில் வழிபடுங்கள். உரிய நேரத்தில் நான் வருவேன்”
அசரிரீயின் குரல் ஓய்ந்ததும் அம்மன் இருந்த பூமி இரண்டாகப் பிளந்தது. குழந்தை வடிவில் இருந்த அம்மன் சிலையை பூமித் தாய் உள் வாங்கிக் கொண்டாள். மறுபடியும் பூமி மூடிக் கொண்டது.
இது செவி வழி தல வரலாறுதான்.
அம்மன் பூமியினுள் சென்ற இடமே தற்போதைய ஆலய கருவறை. அங்கே பாலக்காட்டு கருங்காலி கட்டையின் மேல் அன்னை அருளியபடி அணையாதீபம் எரிந்து கொண்டிருக்கிறது.
சுமார் 400 ஆண்டுகளாக அந்த தீபம் அணையாது ஒளி வீசிக் கொண்டிருக்கும் தகவலை பக்தர்கள் கூறும் போது நம் மேனி சிலிர்த்து ஓய்வதை தவிர்க்க இயலாது.
இதுவரை கருவறையில் தீபமே அன்னையாய் ஒளிர்ந்து கொண்டிருக்க சமீபத்தில் குடமுழுக்கு திருவிழா நடத்த பிரசன்னம் பார்த்தனர்.
“எனக்கு உருகொடுத்து கருவறையில் பிரதிஷ்டை செய்யுங்கள். நான் வெளியே வரும் தருணம் இதுவே. நான் ஜோதியுடன் மூவலராய் இருந்து உங்களை காப்பேன்” என அருள்வாக்கு வர நிர்வாகத்தினர் அதன்படி ஐம்பொன் சிலை வடிவமைத்து மூவலராய் பிரதிஷ்டை செய்துள்ளனர். அன்னையின் பின்புறம் அந்த அணையா தீபம் இப்போதும் தொடர்ந்து ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.
பாலக்காட்டில் இருந்து வந்த அன்னை இவள். எனவே, அன்னை பாலக்காட்டு மாரியம்மன் என்றே அழைக்கப்படுகிறாள். ஆலயம் ‘பாலக்காட்டு மாரியம்மன்’ ஆலயம் என்றே அழைக்கப்படுகிறது.
ஆலய அமைப்பு
ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் உள்ள ராஜகோபுரத்தை தாண்டியதும் விசாலமான பிரகாரம். இடது புறம் மணிமண்டபம் உள்ளது. அதன் உச்சத்தில் உள்ள ராட்சத மணி பார்க்கும் போதே நம்மை மிரட்டுகிறது. அடுத்துள்ள மகாமண்டப முகப்பின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர்.
கருவறையில் அன்னை பாலக்காட்டு மாரியம்மன், நம் வீட்டு சிறுமிபோல், அமர்ந்த கோலத்தில் பின்புறம் அணையா ஜோதி ஜொலிக்க முகத்தில் இளநகை தவழ அருள் பாலிக்கும் அழகை நாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
திருச்சி – தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை சாலையில் அமைந்துள்ளது இந்த ஆலயம். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவுதான்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *