நாகர்கோவில்,
காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவிகள் உள்பட மேலும் 3 பேர், காசி மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
பட்டதாரி வாலிபர் கைது
நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி என்ற சுஜி (வயது 26). பட்டதாரியான இவர் சமூக வலைதளங்களின் மூலம் ஏராளமான இளம் பெண்களிடம் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டு, தனது காதல் வலையில் வீழ்த்தி நெருக்கமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண்களை தனிமையில் சந்தித்து இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார்.
பின்னர் அந்த ஆபாச படங்களை காட்டி அந்த பெண்களிடம் பணம் மற்றும் நகைகள் கேட்டு மிரட்டி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் காசியால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் ஒரு புகார் அளித்தார். அதில் தன்னிடம் நெருங்கி பழகிய ஆபாச படங்களை, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் காசி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
பின்னர் காசியின் லேப்டாப், ஹார்ட் டிஸ்க், செல்போன் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், ஏராளமான பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது போன்ற மிரட்டலுக்கு ஆளானவர்களில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒருவரும் புகார் அளித்தார். இதே போல், வடசேரி பகுதியை சேர்ந்த ஒருவர் காசி மீது கந்து வட்டி கேட்டு மிரட்டியதாகவும் புகார் தெரிவித்தார். காசி மீது அடுக்கடுக்காக புகார்கள் வந்ததை அடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தொடர்ந்து கைதான காசியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் என பலதரப்பட்ட பெண்களை இது போன்று ஏமாற்றியது தெரிய வந்தது. இதில் தனக்கு நெருங்கிய 2 நண்பர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் 3 பெண்கள் பரபரப்பு புகார்
இதையடுத்து காசியின் நண்பர் நாகர்கோவில் கே.பி.ரோட்டை சேர்ந்த டேசன் ஜினோ (19) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் காசியுடன் தொடர்பில் இருந்த பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் யார்? என்பதை அடையாளம் கண்டு பட்டியலிட்டனர். தொடர்ந்து போலீஸ் காவல் விசாரணைக்கு பிறகு மீண்டும் காசியை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நாகர்கோவிலை சேர்ந்த கல்லூரி மாணவி மற்றும் இளம்பெண் ஒருவர், காசி தங்களை காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளனர். இதேபோல கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவியும், காசி மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலீசார் காசி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே காசி மீது சென்னை பெண் டாக்டர், நாகர்கோவில் பெண் என்ஜினீயர் மற்றும் வடசேரியில் கந்துவட்டி புகார் என 3 வழக்குகள் பதிவாகி இருந்தது. தற்போது மேலும் போக்சோ வழக்கு, 3 புதிய கற்பழிப்பு வழக்குகள் காசி மீது பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்மூலம் காசி மீது தற்போது 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *